ஹேமா கமிட்டி அறிக்கை முகநூல்
இந்தியா

ஹேமா கமிட்டி அறிக்கை|வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு; நடிகர்கள் முகேஷ், எடவேலா பாபு-க்கு முன்ஜாமீன்!

PT WEB

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான பொதுநல வழக்கு உள்ளிட்டவற்றை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறப்பு அமர்வை அமைக்க பொறுப்பு தலைமை நீதிபதி முகமது முஸ்தாக் கடந்த 29ஆம் தேதி உத்தரவிட்டதாக கேரள உயர்நீதிமன்ற பதிவுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சி. எஸ். சுதா அமர்வு ஹேமா கமிட்டி தொடர்பான பொதுநல வழக்கை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு மலையாள நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு 7 உறுப்பினர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை கேரள அரசு கடந்த 25ஆம் தேதி அமைத்தது.

இதற்கிடையில், பாலியல் புகாரில் மலையாள நடிகர்கள் முகேஷ், எடவேலா பாபு ஆகியோருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் மீது, எர்ணாகுளம் காவல்நிலையத்தில் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக, எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முகேஷ் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக முகேஷ் தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் பாலியல் குற்றச்சாட்டில் நடிகர் எடவேலா பாபுவுக்கும், நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. மலையாள திரையுலகில் பெண்கள் பலர் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.