இந்தியா

மக்களவையில் எதிர்வரிசைக்குச் செல்லும் எம்.பிக்கள் சஸ்பெண்ட் - சபாநாயகர் எச்சரிக்கை

webteam

மக்களவையில் எதிர்வரிசைக்குச் செல்லும் எம்.பி.க்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என சபாநாயகர் ஓம்.பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கக் கோரி, மக்களவையில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் மற்றும் பாஜக பெண் எம்பிக்கள் பரஸ்பரமாக குற்றஞ்சாட்டினர். அப்போது, பாஜக பெண் எம்பி தன்னை தாக்கியதாக காங்கிரசைச் சேர்ந்த ரம்யா ஹரிதாஸ் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

அதேநேரத்தில், பாஜக பெண் எம்பிக்களிடம், காங்கிரஸ் எம்பிக்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களவை நடவடிக்கையின் போது, எதிர்வரிசைக்குச் செல்லும் எம்.பி.க்கள் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, மக்களவையில் இரண்டாவது நாளாக இன்றும் டெல்லி வன்முறை குறித்து உடனடியாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபாநாயகர் ஓம் பிர்லா சமாதானப்படுத்த முயன்றார். அப்போது பேசிய அவர், டெல்லி வன்முறை தொடர்பாக ஹோலி பண்டிகைக்குப் பின் விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்றும், எனவே அதுவரை அவையை சுமுகமாக நடத்திச் செல்ல உறுப்பினர்கள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே டெல்லி கலவரம் தொடர்பாக விசாரிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.