இந்தியா

பாஜக அலுவலகத்திற்கு பூட்டு பரிசாக அளித்த சமாஜ்வாதி தலைவர்: சூடுபிடித்த உ.பி. தேர்தல் களம்

பாஜக அலுவலகத்திற்கு பூட்டு பரிசாக அளித்த சமாஜ்வாதி தலைவர்: சூடுபிடித்த உ.பி. தேர்தல் களம்

newspt

உ.பி.யில் அடுத்தடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவரும்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஐபி சிங், பா.ஜ.க அலுவலகத்திற்கு பூட்டு ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், மற்றும் உத்ரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளநிலையில், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் முக்கிய அமைச்சராக கருதப்படும் சுவாமி பிரசாத் மவுர்யா இன்று ராஜினாமா செய்துவிட்டு, சாமாஜ்வாதி கட்சியில் இணைந்திருந்தார். அவருடன் மேலும் 3 பா.ஜ.க. எம்எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, பில்ஹார் தொகுதி எம்.எல்.ஏ. பாஹ்வதி சாகர், தில்ஹர் தொகுதியைச் சேர்ந்த ரோஷன் லால் வெர்மா மற்றும் பந்தா தொகுதியைச் சேர்ந்த பிரிஜேஷ் பிரஜபதி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும்நிலையில், லக்னோவில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஐபி சிங் பூட்டு ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார்.இதற்காக அவர் ஆர்டர் செய்த பக்கத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பா.ஜ.க. அலுவலகம் 7, விதான் சபா, ஹஸ்ரத்கஞ்ச், லக்னோ’ என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தனது ட்வீட்டில் ஐபி சிங், மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு, பா.ஜ.க. கட்சித் தலைமை அலுவலகத்துக்கு இந்த பூட்டைப் பயன்படுத்துமாறு, உ.பி. பா.ஜ.க. தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

"ஓம் பிரகாஷ் ராஜ்பார், ஜெயந்த் சவுத்ரி, ராஜ்மாதா கிருஷ்ணா படேல், சஞ்சய் சவுகான் மற்றும் சுவாமி பிரசாத் மவுர்யா ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் உள்ளனர். பாஜக தலைமை அலுவலகத்தில் இருக்கும் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு நான் பூட்டை பரிசாக அனுப்பியுள்ளேன். மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பூட்டை பயன்படுத்தி பூட்விட்டு, வீட்டிற்கு செல்லவும் என்று கூறியுள்ளதுடன், இது அலை அல்ல, இது ஒரு சமாஜ்வாதி கட்சி புயல்" என்றும் ஐபி சிங் ட்வீட் செய்துள்ளார்.