இந்தியா

மீண்டும் தென்மேற்கு பருவ மழை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

மீண்டும் தென்மேற்கு பருவ மழை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

webteam

தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட குறைந்துள்ள நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு பிறகு மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வார காலமாக குறைவான அளவிலேயே தென் மேற்கு பருவமழை பதிவானது. ஆனால் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தென் தமிழகத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி 20 நாட்களை கடந்த நிலையிலும் சராசரி அளவை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. ஜூன் 17ம் தேதி நிலவரப்படி, குடகு பகுதியில் 231மிமீ மழை பதிவாகியிருக்க வேண்டும் ஆனால் 176மிமீ மட்டுமே பதிவாகியிருந்தது. மைசூர் பகுதியில் 47மிமீ மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 24 மிமீ மட்டுமே பதிவாகி உள்ளது. இது சராசரியை விட 50% குறைவானதாகும்.

இதேபோல், கேரள நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை கணிசமாகக் குறைந்துள்ளது. வயநாடு பகுதிகளில் பதிவாகி இருக்க வேண்டிய 296மிமீ மழைக்குப் பதிலாக, 147 மிமீ மட்டுமே பதிவாகி இருக்கிறது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 77 மிமீ மழை பதிவாகியிருக்க வேண்டும் 67 மிமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது சராசரியை விட 13% குறைவாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் மழையைக் கொடுக்கும் என்றாலும், தென்மேற்குப் பருவமழையால் கர்நாடக, கேரள அணைகளின் நீராதாரத்தை நம்பியே நமது விவசாயம் உள்ளது.