இந்தியா

ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுதாத மாணவர்கள்.. கடிதம் எழுதப்படும் என தென்மேற்கு ரயில்வே தகவல்

ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுதாத மாணவர்கள்.. கடிதம் எழுதப்படும் என தென்மேற்கு ரயில்வே தகவல்

Rasus

ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கோரி மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் எழுதப்படும் என்று தென்மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி விஜயா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது.

இதனிடையே கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது. வழக்கமாக ஹம்பி எக்ஸ்பிரஸ் பெங்களூருவிற்கு காலை 7 மணிக்கு வந்துவிடும். ஆனால் இன்று அதற்கு மாறாக காலதாமதமாக மதியம் 2.36 மணிக்கே ஹம்பி எக்ஸ்பிரஸ் பெங்களூரு வந்தடைந்தது. இதனால் அதில் பயணித்த மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனது.

இந்நிலையில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கோரி மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் எழுதப்படும் தென்மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி விஜயா தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரத்தில பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தலையிட்டு, தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாராசமி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.