இந்தியா

தமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை - எதிர்பார்ப்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு

தமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை - எதிர்பார்ப்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு

சங்கீதா

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்றும், வடகிழக்குப் பகுதிகளில் குறைவாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் தென்மேற்குப்பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜூன் ஒன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் 2 நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.