இந்தியா

இரட்டை கொலை:பசு காவலர்களால் 20 மணிநேரம்.. 200 கி.மீ.தூரம் இஸ்லாமிய இளைஞர்கள் அலைக்கழிப்பு?

இரட்டை கொலை:பசு காவலர்களால் 20 மணிநேரம்.. 200 கி.மீ.தூரம் இஸ்லாமிய இளைஞர்கள் அலைக்கழிப்பு?

சங்கீதா

அரியானாவில் பசு கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் காரில் வைத்து எரித்து இஸ்லாமிய இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் காட்மிக்கா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான நசீர் (27) மற்றும் ஜுனைத் (35) ஆகிய இருவரும் கடந்த 15-ம் தேதி காணாமல் போனநிலையில், இரண்டு நாட்கள் கழித்து ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் லோஹரு கிராமத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதில் ஜுனைத் இறைச்சிக்காக மாடுகளை அனுப்பும் வேலை செய்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இரு இஸ்லாமிய இளைஞர்களையும், பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பசு பாதுகாவலர்கள் கடத்தி கொன்று விட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதற்கிடையில் பசுக்களை கடத்தியதாக ஏற்கனவே ஜுனைத் மீது 5 வழக்குகள் உள்ளதாகவும், நசீர் மீது எந்தவித வழக்குகளும் இல்லையென்றும் ஹரியானா போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நசீர் மற்றும் ஜுனைத் கொலை சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு தனி பசு பாதுகாவலர்கள் கும்பல் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, பசு பாதுகாவலர்கள் கும்பல், நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இருவரையும், பசு கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடத்தி, அவர்கள் இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். பின்னர் காயங்களுடன் ஹரியானா பெரோஸ்பூர் ஹிர்கா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பசு கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யும்படி அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், விசாரணை எதுவும் நடத்தாமல் அவர்கள் இருவரையும் அழைத்துச் செல்லும்படி அந்தக் கும்பலிடமே கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து படுகாயங்களுடன் இருந்த நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இருவரையும், அடுத்த பசு பாதுகாவலர்கள் கும்பல், காரில் வைத்துக்கொண்டு ஹரியானாவில் உள்ள 4 மாவட்டங்களுக்கு 200 கிலோ மீட்டர் தூரம், 20 மணிநேரம் வைத்துக்கொண்டு அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. மேலும், காரிலேயே அவர்களை கொலை செய்து, பிப்ரவரி 16-ம் தேதி இரவு பிவானியில் பொலிரோ காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரட்டை கொலை வழக்கில் ராஜஸ்தான் போலீசார் 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள நிலையில், 32 வயதான ரிங்கு சைனி என்ற டாக்சி ஓட்டுநர் ஒருவர் மட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிவானியின் பஜ்ரங் தள் உறுப்பினர் மோனு மானேசர் மீதும் இந்த கொலை வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் அப்போது தான் அங்கு இல்லை என்றும் போராட்டம் செய்து வருகிறார்.

மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 9 பேரில் மோனு மானேசர் உள்பட நான்கு பேர் ஹரியானா போலீசாருக்கு தகவல் (informers of Haryana Police) தெரிவிப்பவர்களாக பணிபுரிந்து வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த இரட்டை கொலை வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபரில் ஒருவரான ஸ்ரீகாந்த் பண்டிட்டை போலீசார் தேடிச் செல்லும்போது வீட்டில் இருந்த அவரின் கர்ப்பிணி மருமகளை ராஜஸ்தான் போலீசார் உதைத்ததாகவும், இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருச்சிதைவு சம்பவத்தில் 45 பேர் மீது ஹரியானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் இந்தப் புகாரை ராஜஸ்தான் போலீசார் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ராஜஸ்தான் - ஹரியானா என இருமாநில போலீசாரும் இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.