17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, நரேந்திர மோடி உள்ளிட்ட 58 அமைச்சர்கள் நேற்று குடியரசுத் தலைவரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். அதன் பின்னர், அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கான துறைகள் இன்று அறிவிக்கப்பட்டனர். ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, அமித்ஷாவுக்கு உள்துறை, நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜூன் 19-ம் தேதி மக்களவைக்கான சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஜூலை 5-ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
முன்னதாக, அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கான முதல் கூட்டம் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.