தேர்தல் விதிமீறல் புகார்களை விரைவாக கையாள்வது குறித்த தனது கருத்தை தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பியதாகவும், ஆனாலும் கிட்டத்தட்ட 1 மாதம் ஆகியும் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அசோக் லவாசா தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்துக்கு ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு ஆணையர்கள் இருப்பது வழக்கம். அதன்படி தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருக்கிறார். ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை இவர்கள் மூன்று பேரும் கூடி எடுப்பது வழக்கம்.
இதனிடையே தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா புகார் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனக் கூறினார். இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது, தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை மேற்கொண்டது என உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி கேள்வி எழுப்பியது. இதனையடுத்து அன்றைய தினமே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, யோகி ஆதித்யநாத், மேனகா காந்தி உள்ளிட்டோர் தேர்தல் விதிகளை மீறி பேசியதாக பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தற்காலிக தடைவிதித்தது.
இதனயைடுத்து மூன்று நாள் கழித்து ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் விதிமீறல் புகார்களை விரைவாக கையாள்வது குறித்து தேர்தல் ஆணையர்களுக்கு அசோக் லவாசா கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கிட்டத்தட்ட 1 மாதத்திற்கும் மேலாகியும் அவரின் கருத்து குறித்து மற்ற ஆணையர்கள் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அத்துடன் தேர்தல் விதிமீறல் புகாரில், ஒருவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்போது மூவர் குழுவில் மற்ற இரண்டு ஆணையர்களின் பெருவாரியான கருத்தை குறிப்பிடும்போதும், தன் கருத்தை குறிப்பிடாமல் இருந்ததால் அசோக் லவாசா போர்க்கொடி உயர்த்தியது தெரியவந்துள்ளது.
இதனிடையே இதுகுறித்து அசோக் லவாசா கூறும்போது, “ தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324-ன் கீழ்தான் வருகிறது. தேர்தல் பரப்புரையில் ஒருவர் விதியை மீறி பேசும்போது, ஏன் பேசக்கூடாது என்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். அப்படியென்றால் ஒருவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும் போதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கருத்தையும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். ஆனால் இங்கு மூவர் குழுவில் பெருவாரியோனோர் எடுக்கும் முடிவு மட்டுமே தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.