இந்தியா

சூரரை போற்றுவோம் - வைரலாகும் நெட்டிசன்களின் பதிவுகள்

சூரரை போற்றுவோம் - வைரலாகும் நெட்டிசன்களின் பதிவுகள்

webteam

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. ஏர்.டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 13-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியது. ஒரு சாமானியன் விமான நிறுவனத்தை நிறுவ எடுக்கும் முயற்சிகளும், அதனை சாத்தியப்படுத்த அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளே கதைக்களம்.

பார்வையாளர்களையும், அவர்களது கனவுகளை நோக்கி உந்தித்தள்ளும் படமாக “சூரரைப் போற்று” பார்க்கப்படும் நிலையில், ஜி.ஆர்.கோபிநாத்தை போன்றே அசாத்திய சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தங்களின் கனவுகளை சாத்தியப்படுத்திய கதாநாயகர்கள் குறித்த பதிவுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் ப்ரண்ட்லைன் எடிட்டர் விஜய்ஷங்கர் ராமச்சந்திரன்  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதில் “ரேலு வசாவே” மற்றும் “ஷகீல் அஹமது” என்பவர்கள் குறித்து விவரித்துள்ளார்.

காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 31 வயதான “ஷகீல் அஹமது” டெல்லி ஐஐடியில் ஆராய்ச்சி மேற்படிப்பு மாணவராக கல்வி பயின்றவர். உலகின் பல்வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தபோதும் அவற்றையெல்லாம் நிராகரித்து விட்டு இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் பூன்ச் மாவட்டத்தின் அரசு கல்லூரியில் வேதியியல் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இது குறித்து அவர் கூறும்போது “ நல்ல கல்வி பெறுவதற்காக நடக்கும் போராட்டம் பற்றி எனக்குத் தெரியும். எனக்கு ஒரு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை உயிரிழந்து விட்டார். வீட்டின் முதல் பட்டதாரியான நான் அரசு வழங்கிய சலுகைகளை வைத்தே படித்தேன். எனது படிப்பு எனது சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்ற காரணத்திற்காக மேற்படிப்பு முடிந்ததும் ஊருக்குத்திரும்பி விட்டேன்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் ஸ்டான்போர்டு பலகலைகழகம் தயாரித்துள்ள உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் ஷகீல் பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் அறிவியல் தொடர்பான 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.


ரேலு வசாவே

மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்தர்பார் மாவட்டத்தின் சிமல்காடி என்கிற பழங்குடியினர் கிராமத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்தான் 27 வயதான ரேலு வசாவே. இவர் ஆறு வயதிற்கு முன்னதாக உள்ள குழந்தைகளுக்கும், கருவுற்றப் பெண்களுக்கும் ஊட்டச்சத்து சரிவர கிடைக்கின்றனவா என்பதை கண்காணித்து வருகிறார்.

வழக்கமாக நர்மதை ஆற்றங்கரையிலிருக்கும் அங்கன்வாடிக்கு வரும் கருவுற்ற பெண்கள், அங்கு வழங்கப்படும் உணவை வாங்கிச்செல்வது வழக்கம். ஆனால் கொரோனாத் தொற்று பயத்தின் காரணமாக அங்கன்வாடிக்கு வரும் பெண்களின் வரத்து தடைப்பட்டது.

இதனால் வேதனையடைந்த ரேலு, மீனவரின் படகை வாடகைக்கு எடுத்து, எடை இயந்திரம் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு பெண்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வருகிறார்.

காலை 7.30 மணிக்கு படகை தட்டும் ரேலு 18 கி.மீ பயணம் செய்து அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் கருவுற்றப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரை இப்பணியைச் செய்து வருகிறார். இடையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நாட்களில் மட்டும் அவர் கிராமங்களுக்குச் செல்லவில்லை.

இது குறித்து அவர் கூறும்போது “ ஒவ்வொரு நாளும் படகை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மாலை வீட்டை அடையும்போது கைகளெல்லாம் வலிக்கும். ஆனால் அது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் தேவையான ஊட்டச்சத்தானது கிடைக்கவேண்டும். கொரோனா சூழலில் முன்னேற்றம் ஏற்படும் வரை நான் இதைச் செய்வேன்” என்றார்.