இந்தியா

அட்டைப் பெட்டியில் இனி திருப்பதி லட்டு!

webteam

திருப்பதியில் பக்தர்களுக்கான லட்டுகளை பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, அட்டை பெட்டிகளில் வழங்க முடிவு செய்துள்ளது.

திருமலையில் கடந்த மாதம் முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்தது. ஆனால், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்லும் கவருக்கு மாற்றுத் தீர்வு காணும் வரை பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த முடிவு செய்தது.

தினமும், திருமலையில் ஐந்து லட்சம் லட்டு விற்கப்படுகிறது. அதை எடுத்துச் செல்ல, ஒரு லட்சம் கவர்களை தேவஸ்தானம் விற்று வருகிறது.

தற்போது பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக மாற்றாக அட்டைப் பெட்டிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அட்டை பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள், ஏழுமலையான் உருவப்படங்கள், தேவஸ்தான முத்திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 10 நாட்களுக்கு மேலாக லட்டுகளை வைத்து தர பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.