இந்தியா

திஹார் சிறையை இனி சுற்றிப் பார்க்கலாம், தங்கலாம் !

திஹார் சிறையை இனி சுற்றிப் பார்க்கலாம், தங்கலாம் !

webteam

விரைவில் டெல்லி திஹார் சிறையில் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொதுவாகவே திரைப்படங்களில் சிறைச்சாலை காட்சிகள் என்றாலே வெள்ளை உடைகள், கைதிகள் நிறைந்த அறைகள் மட்டுமே சித்தரிக்கப்படும். இதனால் மக்கள் அனைவருக்கும் சிறைச்சாலை என்றால் மிகவும் மோசமான இடம் என்ற எண்ணம் இருந்து வந்தது. அத்துடன் அங்கு இருக்கும் கைதிகள் அனைவரும் குற்றச் சம்பவங்கள் செய்திருப்பதால் சிறைச்சாலை என்பது மிகவும் பெரிய வசதிகள் இல்லாத இடமாகதான் இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கியிருந்தது. மக்களின் இந்த எண்ணங்களை மாற்றி அமைத்தச் சிறைச் சாலை தான் திஹார் சிறைச்சாலை. 

இந்தியாவில் இருக்கும் முக்கியமான சிறைச்சாலைகளில் ஒன்று டெல்லியின் திஹார் சிறை. இது இந்தியாவின் மிகப் பெறிய மற்றும் அதிக சிறைவாசிகளை கொண்ட சிறைச்சாலை. திஹார் சிறைச்சாலை 15ஆயிரம் சிறை கைதிகள் கொண்டு 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தச் சிறைச்சாலையைப் பற்றி நிறையே தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து மக்களிடம் இந்தச் சிறைச்சாலையை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் எழுந்தன. அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திஹார் சிறையை காணவேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தனர்.  

இந்நிலையில், டெல்லி திஹார் சிறை தற்போது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சென்று தங்கி மற்றும் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது "திஹார் சிறையில் ஒரு புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தங்கும் போது மக்களுக்கு சிறை கைதிகளின் உடைகள் மற்றும் சிறைச்சாலையின் உணவு ஆகியவை வழங்கப்படும். இந்தக் சிறைக் கட்டடத்தில் தங்குவதற்கு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்.

மேலும் இந்த வசதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டது. ஏனென்றால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமிருந்து திஹார் சிறையை காணவேண்டும் நிறையே மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இதனால் டெல்லி சுற்றுலாத் துறை மற்றும் டெல்லி அரசு ‘ஃபீல் லைக் ஜெயில்’ என்ற திட்டம் மூலம் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் சிறப்பு வசதி டெல்லி உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளது”எனக் கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திலுள்ள 220 ஆண்டுகள் பழமையான சங்கரெட்டி சிறைச்சாலை சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டிருந்தது. இந்தச் சிறைச்சாலையை காண 500 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.