ஹைதராபாத்தில் தனது பெயர் கொண்ட ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு நடிகர் சோனு சூட் திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. அதனால், மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சென்றார்கள்.
அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் நடிகர் சோனு சூட். அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்தார். மேலும், ட்விட்டரில் பல்வேறு கோரிக்கை வைத்து உதவி கேட்கும் ஏழைகளுக்கு உதவி வந்தார். அவரின் சேவையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி பூஜை செய்கின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் சோனு சூட் சேவைகளால் ஈர்த்த ஒருவர் ’லஷ்மி சோனு சூட் பாஸ்ட் ஃபுட் சென்டர்’ என்று சோனு சூட் பெயரை தனது பாஸ்ட் ஃபுட் கடைக்குச் சூட்டி கெளரவித்துள்ளார். ஹைதராபாத்தில் இருக்கும் இந்த உணவகம் குறித்து சமூக வலைதளங்களில் பார்த்த சோனு சூட் கடை உரிமையாளருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக நேரடியாகச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோனு சூட்டை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளேயே, சமையலில் இறங்கிய சோனு சூட், நூடூல்ஸ், ஃப்ரைடு ரைஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகளைத் தயாரித்து ஃபாஸ்ட் ஃபுட் கடைக்காரராக மாறினார். பின்னர் உணவையும் உட்கொண்டார். இதனால், பொதுமக்கள் அங்குக்கூடி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் சோனு சூட் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.