வேலையிழந்து காய்கறி வியாபாரம் செய்துவந்த சாப்ட்வேர் பொறியாளருக்கு நடிகர் சோனு சூட் வேலை வழங்கியுள்ளார்.
கொரோனாவால் ஊரங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் பல வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்குச் சென்ற இடங்களில் சிக்கிக் கொண்டனர். அந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் தன்னுடைய சொந்த செலவில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல பல உதவிகளை அளித்தார்.
பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இவர் ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். சொந்த செலவில் பேருந்துகள் மட்டுமின்றி விமானம் மூலம் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பினார்.
இதுமட்டுமின்றி ட்விட்டரில் கோரப்படும் பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு
டிராக்டரை அனுப்பி வைத்தார். இந்நிலையில் வேலையிழந்து காய்கறி வியாபாரம் செய்துவந்த சாப்ட்வேர் பொறியாளர் சாரதா என்ற பெண்ணுக்கு வேலை வழங்கியுள்ளார்.இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், எங்களது அதிகாரிகள் அவரை சந்தித்தனர். நேர்காணல் முடிந்து வேலைக்கான கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. ஜெய்ஹிந்த் எனத் தெரிவித்துள்ளார்