கிர்கிஸ்தான் நாட்டில் சுமார் 3000 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மருத்துவம் படிப்பதற்குச் சென்ற மாணவர்கள் பொதுமுடக்கத்தால் அங்கேயே சிக்கிக் கொண்டார். இந்நிலையில் தற்போது கிர்கிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப நடிகர் சோனு சூட் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஜூலை 22-ம் தேதி ஒரு தனி விமானம் மூலம் அந்த மாணவர்கள் இந்தியா திரும்புவதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பதிவில், "கிர்கிஸ்தானில் இருக்கும் மாணவர்கள் வீடு திரும்புவதற்கான நேரம் இது. பிஷ்கெக் - வாரணாசி இடையே முதல் தனி விமானம் 22 ஜூலை அன்று புறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் உங்கள் மெயிலுக்கும் மொபைல் எண்ணுக்கும் இன்னும் சற்று நேரத்தில் அனுப்பப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “கிர்கிஸ்தானின் இருக்கும் மாணவர்கள், மீட்பு தொடர்பான எந்தவொரு தகவலுக்கும் sonu4kyrgyzstan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இது இந்திய மாணவர்களை மீட்பதற்கு பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் ஐடி மட்டுமே. இதை நிர்வகிப்பதற்காக சோனு சூட் டீம் எந்த வகையிலும் உங்களிடமிருந்து பணம் வசூலிக்கவில்லை அல்லது சேகரிக்கவில்லை என்பதில் ஜாக்கிரதையாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பொதுமுடக்கத்தின் போது மும்பையில் சிக்கித் தவித்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு செல்ல சோனு சூட் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.