இந்தியா

20ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை, தங்குமிடம், உணவு: உதவிக்கரம் நீட்டிய சோனுசூட்

20ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை, தங்குமிடம், உணவு: உதவிக்கரம் நீட்டிய சோனுசூட்

webteam

நொய்டாவில் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலையுடன் கூடிய தங்குமிடம் மற்றும் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு சூழலால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் சோனுசூட் உதவிக்கரம் நீட்டினார். மேலும், சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கும் உதவி வந்தார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்களையும் மாணவர்களையும் இந்தியா அழைத்துவர விமான செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். கேரளாவில் சிக்கித்தவித்த பீகார் மாநில ஆயத்த ஆடைத் தொழிலாளர்களை விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப விமான ஏற்பாடு செய்தார். விவசாயிக்கு டிராக்டர், ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தது உள்ளிட்ட உதவிகளை செய்து வந்ததால் சமூக வலைதளங்களில் அவருக்கு உதவிக்கான கோரிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் நொய்டாவில் 20ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலையுடன் கூடிய தங்குமிடம் மற்றும் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சோனு சூட் தெரிவித்துள்ளார். சில தன்னார்வலர்களுடன் கைகோர்த்து தொழிலாளர்களுக்கு வேலையுடன் தங்குமிடம் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த உதவிக்கு தகுதியான ஏழ்மையான தொழிலாளர்கள் விண்ணப்பங்கள் மூலம் கண்டறியப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.