புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 4வது கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும். இந்தப் பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான். இந்தியா முழுவதும் எங்குப் பார்த்தாலும் சாலைகளில் தங்கள் சொந்த ஊருக்கு, மூட்டை முடிச்சுகளுடன் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர்கள் நடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். எனவே இவர்கள் பிரச்னைக்கு முதலில் தீர்வு காண வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அண்மையில் கூட சாலைகளில் நடந்து சென்றுகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர் நேரடியாகச் சென்று சந்தித்தார்.
இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மற்றும் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்த அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குச் சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை 15 கட்சிகள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளன.