அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகிக்கும்போது சோனியா காந்தி பிரதமராக வருவதில் என்ன தவறு உள்ளது? என்று கருத்து தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சரும் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில். ''2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த போது, சோனியா காந்தி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். ஆனால், எதிர்கட்சிகள் அவரை வெளிநாட்டவராக முன்னிலைப்படுத்தியதால் அது நடக்க இயலாமல் போனது.
அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கும் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியும் மக்களவை உறுப்பினருமான சோனியா காந்தி பிரதமராக வருவதில் என்ன தவறு உள்ளது? அதை ஏற்காவிட்டாலும், சரத் பவாரை பிரதமராக நியமித்திருந்தால் காங்கிரசுக்கு இப்போதுள்ள கதி ஏற்பட்டிருக்காது'' என்று அவர் கூறினார்.