காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் முடிவை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தத் தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சி தொடர்பான அறிவிப்புடன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அமரிந்தர் சிங் அறிவித்தார். இதுதொடர்பாக சோனியா காந்திக்கு எழுதிய 7 பக்க கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமரிந்தர் சிங், அதில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை பகிரங்கமாக வசை பாடியிருந்தார். பாகிஸ்தான் அரசின் ஆழமான கூட்டாளி சித்து என்று அமரிந்தர் விமர்சித்திருந்தார்.
தன்னை காங்கிரஸிலிருந்து வெளியேற்றுவதற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் தீட்டிய நள்ளிரவு சதித்திட்டமே காரணம் என்ற கடுமையான குற்றச்சாட்டையும் அமரிந்தர் சிங் கூறியிருந்தார்.