இந்தியா

நகராட்சி அலுவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது

நகராட்சி அலுவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது

rajakannan

மத்தியப் பிரதேசத்தில் நகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் இந்தூர்-3 தொகுதி எம்.எல்.ஏவுமான ஆகாஷ் விஜய்வர்கியா அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்துள்ளார். அவர் இடிக்கு பணியை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் எனத் தடுத்தார். 

நகராட்சி அலுவலர்களுக்கும் ஆகாஷ் ஆதரவாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கோபமடைந்த ஆகாஷ் அலுவலரை‌ அனைவரின் முன்னிலையில், கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அத்துடன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து அலுவலர்களை தாக்கினார். போலீசார் தடுக்க முயன்ற போது தொடர்ந்து அவர் தாக்குதலில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, தாக்குதல் நடத்திய விஜய்வர்கியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது, பொதுப் பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி அலுவலரை தாக்கிய ஆகாஷ் விஜய்வர்கியை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.