இந்தியா

சமையல்காரரின் மகன் ஜேஇஇ தேர்வில் சாதனை..!

சமையல்காரரின் மகன் ஜேஇஇ தேர்வில் சாதனை..!

Rasus

பள்ளி சமையல்காரரின் மகன் ஜேஇஇ தேர்வில் 90 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஐஐடி-யில் சேர்ந்து படிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜேஇஇ (JEE) நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். இதற்காக நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வில் சத்தீஸ்கரை சேர்ந்த பள்ளி சமையல்காரரின் மகன் 90 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். வீட்டில் நிலவும் அதிகப்படியான வறுமையை வென்று மாணவர் பால்முகுந்த் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். பால்முகந்தின் தந்தை அரசுப் பள்ளி ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். அவரின் ஒருநாள் வருமானம் ரூபாய் 40 மட்டுமே ஆகும். இந்நிலையில் அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயற்சி மையத்தில் படித்து இந்த வெற்றியை எட்டியிருக்கிறார் பால்முகுந்த்.

இதுகுறித்து பால்முகுந்த் கூறும்போது, “ அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் மிகச் சிறப்புடன் எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். என் நீண்ட நாள் கனவே பொறியாளர் ஆகுவதுதான். அதன்படி பயிற்சி மேற்கொண்டதால் வெற்றி கிடத்துள்ளது” என்றார்.

இதே இலவச பயிற்சி மையத்தில் படித்த மற்றொரு விவசாயி ஒருவரின் மகனும் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக இந்த மையத்தில் படித்த 71 மாணவ- மாணவிகள் ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ‘சங்கல்ப் ஷிக்சன் சன்ஸ்தான்’ என்பது மாநில அரசு சார்பில் இலவசமாக நடத்தப்படும் பயிற்சி மையம் ஆகும். நல்ல திறமை இருந்தும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குழந்தைகள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்காக இந்த இலவச மையம் செயல்பட்டு வருகிறது.