இந்தியா

ஜார்க்கண்ட்: கருணை அடிப்படையில் வேலைபெற தந்தையைக் கொன்ற மகன் கைது

ஜார்க்கண்ட்: கருணை அடிப்படையில் வேலைபெற தந்தையைக் கொன்ற மகன் கைது

Sinekadhara

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கருணை அடிப்படையில் வேலைபெற தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்திலுள்ள பார்ககானா பகுதியில் மத்திய நிலக்கரி புலங்கள் லிமிடெட் அமைந்துள்ளது. அங்கு தலைமை பாதுகாவலராக வேலை செய்துவந்த கிருஷ்ணா ராம்(55) என்ற நபர் வியாழக்கிழமை காலை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இறந்த நபரின் அருகே, அவருடைய மொபைல் போனும், ஒரு சிறிய கத்தியும் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். விசாரணையில் கொலை செய்தது ராமின் மகன்தான் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் தகவல் அளித்த துணை பிரிவு போலீஸ் அதிகாரி பிரகாஷ் சந்திர மாஹ்தோ, ராமின் மூத்த மகன்தான் தன் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்றும், மேலும் விசாரணையில், மத்திய அரசு வேலையைப் பெறத்தான் இப்படி செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

மத்திய நிலக்கரி புலங்கள் லிமிடெடில் ஒருவர் வேலையில் இருக்கும்போதே இறந்துவிட்டால், அவருடைய வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்கும் சலுகை உள்ளது. எனவே அரசு வேலைக்கு ஆசைப்பட்டு மகனே தந்தையை கொன்றதாக பிரகாஷ் கூறியுள்ளார்.