இந்தியா

“என்.சி.பியின் தலைவரே நான்தான் என அஜித்பவார் கடிதத்தில் கூறியுள்ளார்” - மத்திய அரசுத் தரப்பு வாதம்

“என்.சி.பியின் தலைவரே நான்தான் என அஜித்பவார் கடிதத்தில் கூறியுள்ளார்” - மத்திய அரசுத் தரப்பு வாதம்

webteam

ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது ஆளுநர் செயல் தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்ஜீவ் கண்ணா அமர்வு விசாரித்து வருகின்றனர். 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்னாவிஸை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், ஆதரவு இருப்பதாக கூறி பட்னாவிஸ், அஜித் பவார் அளித்த கடிதங்களின் நகல்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து ஆளுநர் செயல் தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடுகையில், ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்தார். மேலும், “ஆளுநரை விரைவாக வேலை செய்யச் சொல்லவோ அவசரப்படுத்தவோ முடியாது. ஆதரவு கடிதங்கள் குறித்து ஆளுநர் விசாரிக்கத் தேவையில்லை. 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக அஜித் பவார் அளித்த கடிதத்தில் உள்ளது. என்.சி.பியின் தலைவரே நான்தான் என அஜித்பவார் கடிதத்தில் கூறியுள்ளார். சுயேட்சைகள் மற்றும் அஜித் பவார் அளித்த ஆதரவு கடிதத்தால் ஆளுநர் பட்னாவிஸை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். பல்வேறு கேள்விகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் தேவை” என வாதாடினார்.