இந்தியா

‘தரமான கல்விக்காக மக்கள் அதிக பணம் செலவிட தயார்’ - அரசின் முடிவு குறித்து ஷமிகா கருத்து

‘தரமான கல்விக்காக மக்கள் அதிக பணம் செலவிட தயார்’ - அரசின் முடிவு குறித்து ஷமிகா கருத்து

webteam

தனியார் பல்கலைக் கழகங்களின் கல்விக் கட்டணத்தை முறைபடுத்தப் போவதாக மத்திய மனிதவள அமைச்சகம் எடுத்திருந்த முடிவு குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்த ஷமிகா ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று இருந்தவர் ஷமிகா ரவி. இவர் அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் அவர் தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படையாக ட்விட்டரில் தெரிவித்து வந்தார்.

அந்தவகையில் தற்போது தனியார் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை முறைபடுத்தப் போவதாக மத்திய அரசு எடுத்த முடிவு குறித்து ஷமிகா ரவி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இது ஒரு தவறான முடிவு. இந்த விஷயங்களை செய்வதற்கு பதிலாக அரசு பல்கலைக் கழகங்களின் தரத்தை மேம்படுத்த அரசு முயற்சி செய்யவேண்டும். அத்துடன் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். இந்திய உயர்கல்வி வளர வேண்டும் என்றால் இந்த மாதிரியான சோசியலிஷ கொள்கைகளை அரசு கைவிட வேண்டும்.

தரம் இருக்கும் பட்சத்தில் அதிக செலவு செய்து படிக்க வைக்க மக்கள் தயாராக உள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணங்கள் வசூலித்தாலும் அங்கே படிக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அதனால்தான், தனியார் பல்கலைக் கழகங்களுக்கு அதிக மவுசு இருக்கின்றது.

சிலர் உயர் கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். பள்ளிக் கல்வி வரை அனைவருக்கும் இலவசம் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால், உயர் கல்வியை அப்படி எல்லோருக்கும் இலவசமாக கொடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, ஷமிகா பொருளாதார மந்தநிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று வெளிப்படையாக தெரிவித்தார். இதற்கு பின்பு இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை விதித்தது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஷமிகா ரவி கருத்து தெரிவித்தார். இவ்வாறு வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து வந்தநிலையில், அவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.