இந்தியா

'சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் தேவை'-மத்திய அரசு !

'சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் தேவை'-மத்திய அரசு !

jagadeesh

தொலைக்காட்சிகளை விட சமூக மற்றும் இணையதள ஊடகங்களைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், சிவில் சர்வீஸ் பணியிடங்களை ஆக்கிரமிக்க குறிப்பிட்ட மதத்தினர் சதி செய்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தது.

மேலும், இதுபோன்ற டிவி சேனல்களைக் கட்டுப்படுத்த எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. பத்திரிகை மற்றும் டிவி ஊடகங்களுக்கு ஏற்கெனவே சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன என்றும் அவற்றைக் கட்டுப்படுத்த வழிகளும் உள்ளன என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே வழக்கில் குறிப்பிட்ட தனியார் டிவி குறித்து மட்டுமே விசாரணை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், சமூக மற்றும் இணையதள ஊடகங்கள் குறித்து விசாரித்து அவற்றைக் கட்டுப்படுத்த வழிமுறைகளை வகுக்கலாம் என்றும் அவற்றில்தான் அதிகளவில் பொய் செய்திகளும், வெறுப்பு ஏற்படுத்தும் செய்திகளும் வெளியாவதாக மத்திய அரசு தெரிவித்தது.