இந்தியா

கொரோனா சமூக பரவல்: ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் கேரளா!

கொரோனா சமூக பரவல்: ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் கேரளா!

sharpana

கேரள திருவனந்தபுர பகுதிகளில் கொரோனா சமூக தொற்றாக பரவ ஆரம்பித்திருப்பதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதிபடுத்தியுள்ளார்.

கேரள தலைநகரான திருவனந்தபுரம் அருகேயுள்ள புல்லுவிலா, பூந்துரா ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, கேரளாவிலுள்ள அனைத்து மாவட்டங்களுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் தலைநகரான திருவனந்தபுரம்தான் கடுமையான சமூகப்பரவலை எதிர்கொண்டுள்ளது. அதற்கடுத்து, எர்ணாகுளம் உள்ளது. இதுவரை, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புல்லுவிலாவில் பரிசோதிக்கப்பட்ட 97 பேரில் 57 பேருக்கும், பூந்துராவில் பரிசோதிக்கப்பட்ட 50 பேரில் 26 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டுமே 246 புதிய  ‘பாசிட்டிவ்’ கேஸ்கள் பதிவாகியுள்ளன. அதில், 4 பேர் சுகாதாரத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆரம்பத்தில், கேரளாவின் கொரோனா நடவடிக்கைகளை மற்ற மாநில மக்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போதும், சமூக பரவல் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் பினராயி விஜயன்.

சமூக பரவல் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியவர்,    

    “கொரோனா பாதிப்பு இன்னும் யாருக்கெல்லாம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது. கடலோர கிராமங்களில் முழுமையான ஊரடங்கு இருக்கும். திருவனந்தபுரத்திலுள்ள கரையோர பகுதிகள் தனி மண்டலமாக அறிவித்து கடுமையாக கண்காணிக்கப்படும். அங்கிருந்து  யாரும் மற்ற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடாது” என்று கூறியுள்ளார்.