சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே நீண்ட காலத்திற்குப் பிறகு தனது மவுனத்தை உடைத்துள்ளார்.
ஜன் லோக் பால் உண்ணாநிலை போராட்டம் மூலம் இந்தியா முழுவதும் அதிகம் அறியப்பட்டவர் காந்தியவாதி அன்னா ஹசாரே. இவர் சில வருடங்களாக எந்த விஷயத்தைக் குறித்தும் கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் ஹசாரே ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சில செய்திகளை மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சியில் அன்னா ஹசாரே, ஒரு கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு, ஒரு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் தெரிவித்துள்ள கோரிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். அரசு, நிர்வாகம் மற்றும் மக்கள் என அனைவரும் ஒன்றாக மாறி கொரோனாவை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்பதைக் காட்டுங்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்த உரையில் "நான் இராணுவத்திலிருந்தபோது, நான் ஆயுதங்களுடன் சண்டையிட்டேன். ஆனால் இந்தச் சண்டை வேறு. கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு வீட்டில் தங்குவது மட்டுமே, ஒரே ஒரு ஆயுதம்” எனக் கூறிய அவர் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள், காவல்துறை மற்றும் துப்புரவுப் பணியாளர்களை வாழ்த்தினார்.
குறிப்பிடத்தக்க வகையில், சமூக சேவகர் அன்ன ஹசாரேவின் இந்த ஆலோசனை மிகவும் முக்கியமானது. நாட்டின் மூத்த சமூக சேவகரான இவர் நாட்டு நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து போராவிட்டால் வருகிறார். உலகம் முழுவதும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், கொரோனா போரை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தால் வெல்ல முடியும் என்று அவர் கருதுகிறார் . இது குறித்து, பிரதமர் செய்த பணி பாராட்டத்தக்கது, இதற்காக அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.