தெலங்கானா தேர்தலில் மீண்டும் சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக வெற்றி பெறவுள்ளதை முன்னிட்டு 90 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் தெலங்கானா மற்றும் மிசோரம் வெற்றிகள் முடிவாகிவிட்டன. மிசோரமில் எம்.என்.எஃப் கட்சி வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. சந்திரசேகர் ராவ் சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
அவரது இந்த வெற்றியை கட்சியினர்‘சந்திரசேகர் ராவ் 2.0’ என்று கொண்டாடி வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அத்துடன் சுமார் 90 இடங்களை நெருங்கி அவர்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், 90 கிலோ கேக் ஒன்றை தயார் செய்துள்ளனர். பிங்க் கலரில் தயார் செய்யப்பட்டுள்ள அந்த கேக்கில், சந்திரசேகர் ராவின் கார் வெற்றிக்கொண்டாட்டத்துடன் சீறிச் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தெலங்கானாவில் கொண்டாட்டங்களை தவிர்த்துள்ள காங்கிரஸ் கட்சியினர் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளது. ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் வெறும் 25 இடங்களுக்குள் மட்டும் வெற்றி பெறும் நிலை அங்குள்ளது. இதற்கிடையே சந்திரசேகர் ராவிற்கு, சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.