இந்தியா

இதுவரை எத்தனை இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வந்து இருக்கிறார்கள்? - மத்திய அரசு தகவல்

இதுவரை எத்தனை இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வந்து இருக்கிறார்கள்? - மத்திய அரசு தகவல்

Veeramani

'ஆபரேஷன் கங்கா' நடவடிக்கையின் கீழ் 30 விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,400 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, " எங்களது முதல் ஆலோசனை வெளியானதில் இருந்து மொத்தம் 18,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். 'ஆபரேஷன் கங்கா' நடவடிக்கையின் கீழ் 30 விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,400 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில், ஒரே நாளில் மொத்தம் 3,000 இந்தியர்கள் 15 விமானங்களில் அழைத்து வரப்பட உள்ளனர்.

உக்ரைனில் இருந்து கடந்துவந்து தற்போது அண்டை நாடுகளில் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரையும் விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் அதிக விமானங்களை திட்டமிடுகிறோம், அடுத்த 2-3 நாட்களில் ஏராளமான இந்தியர்கள் வீடு திரும்புவார்கள். திரும்பி வருபவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது. நமது மக்கள் வெளியேற உதவி செய்யும் உக்ரைன் அரசாங்கத்தையும் அண்டை நாடுகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.

இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. நாங்கள் நேற்று அறிவுரை வழங்கியதையடுத்து, ஏராளமான மாணவர்கள் கார்கிவ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர், இன்னும் சில நூறு இந்தியர்கள் கார்கிவ்வில் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். சாத்தியமான போக்குவரத்து முறையில் மாணவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்வதே எங்கள் முன்னுரிமை." என தெரிவித்தார்

இதற்கிடையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரை வெளியேற்ற ரஷ்யா 130 பேருந்துகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் உயர் இராணுவ ஜெனரல் மிகைல் மிஜின்ட்சே தெரிவித்துள்ளார்