சபரிமலையில் மகர விளக்கு பூஜைக் காலத்தில் தரிசனத்திற்காக இதுவரை 12.42 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலமான தற்போது ஆங்கிலப் புத்தாண்டு முதல் ஜனவரி 19ம் தேதி வரை 12 லட்சத்து 42 ஆயிரத்து 302 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஜனவரி முதல் தேதியில் இருந்து 19ம் தேதி வரை 17.10 லட்சம் பக்தர்களுக்கு "வெர்ச்சுவல் க்யூ" மூலம் தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.
அதிகபட்சமாக ஜனவரி 4ம் தேதி 89,969 பேரும் குறைந்தபட்சமாக ஜனவரி 19ம் தேதி 9,136 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 1 முதல் 8ம் தேதி வரையும், பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 13, 14 தேதிகளிலும் தினசரி 89 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
ஜனவரி 15 ஆம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை தினசரி 34 ஆயிரத்திற்கும் கீழ் முன்பதிவு நடந்துள்ளது. ஜனவரி 10, 11, 12 தேதிகளில் முறையே 55, 35, 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் இனியும் 4,67,698 பேர் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மண்டல பூஜை காலமான கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 27ம் செய்தி வரையிலான 41 நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து முடித்துள்ளனர்.