இந்தியாவில், ஆண்டுக்கு 3-4 மில்லியன் பாம்புக்கடிகளால் சுமார் 50,000 இறப்புகள் ஏற்படுகின்றன. இது உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகளில் பாதியாகும். உத்திரப்பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞரை 40 நாட்களில் 6 முறை பாம்பு கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யின் சௌரா கிராமத்தில் வசித்து வருபவர் விகாஸ் துபே, வயது 24. கடந்த ஜூன் 2 ஆம் தேதி துபே படுக்கையில் இருந்து இரவு எழுந்த பொழுது, முதல் முறையாக இவரை பாம்பு கடித்துள்ளது. இதனால், இவரின் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு இவரை அழைத்து சென்று, சிகிச்சை அளித்துள்ளனர்.
அங்கு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சூழலில், உடல் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனைதொடர்ந்து, இந்த சம்பவம் நடைப்பெற்ற 8 நாட்களிலேயே மீண்டும் பாம்பு கடித்துள்ளது. மீண்டும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர் சிகிச்சை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து மூன்றாம் முறையாக, கடந்த ஜூன் 17 ஆம் தேதி மீண்டும் பாம்பு கடித்துள்ளது. இதனால், மீண்டும் அதே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்கு சுயநினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் பாம்பு கடியால், குழப்பமடைந்த மருத்துவர்கள், இவருக்கு சிகிச்சை அளித்து உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசிக்கும்படி, இவரை அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், ராதாபூரில் உள்ள தனது அத்தையில் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், அங்கேயும் அவரை இரண்டு முறை பாம்பு கடிக்கவே, அங்கிருந்து துபேவின் தாய் அவரை மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், 6 ஆவது முறையாக கடந்த ஜூலை 6 ஆம் தேதி இவரின் வீட்டில் வைத்தே பாம்பு கடித்துள்ளது.. மீண்டும் அதே மருத்துவ மனைக்கு அழைத்து சென்று அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இவ்வாறாக, கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 6 முறை பாம்பு இவரை கடித்துள்ளது. இந்நிலையில், இவரை தொடர்ந்து பாம்பு கடிக்கும் சம்பவமும் , ஆனாலும், இவர் உயிர் பிழைத்து விடுவதும் கேட்போரை குழப்பத்திலும், பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மூத்த மருத்துவ அதிகாரி ராஜீவ் கிரி தெரிவிக்கையில், “ பாம்பு கடியை குணப்படுத்த நிறைய பணம் செலவழித்ததாகவும், தற்போது அதிகாரிகளிடம் நிதி உதவி கோரியுள்ளதாகவும், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட நபர் கதறி அழுதார். அப்போது, நான் தான் அரசு மருத்துவமனைக்கு செல்லும் படியாகவும்,அங்கு பாம்பு கடிக்கு மருத்துவம் இலவசம் என்று கூறினேன்.
மேலும், அவரைக் கடிப்பது உண்மையில் பாம்புதானா என்பதை கண்டறிய வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் திறமையையும் நாம் பார்க்க வேண்டும். இப்படி, ஒவ்வொரு சனிக்கிழமையும் இவர் பாம்பு கடியால் பாதிப்படைந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதன்பிறகு, ஒரே நாளில் குணமடைந்து விடுவது விசித்திரமாகத் தெரிகிறது, ஆகவே, இது குறித்து விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.