smriti irani pt web
இந்தியா

“ஊழலைப் பேசும் போது கூட்டணியில் இருக்கும் திமுகவைப் பாருங்கள்” - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

ஊழலைப் பேசும் போது கூட்டணியில் இருக்கும் திமுகவைப் பாருங்கள் என இந்தியா கூட்டணிக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்துள்ளார்.

Angeshwar G

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று மக்களவையில் தொடங்கியது. விவாதத்தில் முதலில் ராகுல் பேசுவார் என சொல்லப்பட்டது. ஆனால், கௌரவ் கோகோய்தான் தீர்மானத்தை கொண்டு வந்து முதலில் பேசினார். மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்திருப்பதால், வட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரை பேசவைக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாகவும், அதனாலேயே கௌரவ் கோகோய் பேச வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இவர், அசாம் மாநில காங். எம்.பியாவார். விவாதத்தின் மீது எந்தெந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச உள்ளனர் என்ற பட்டியலும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய அரசுக்கு மீதான 2-ம் நாள் விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். பதவி நீக்கம் ரத்துக்குப்பின் ராகுல் காந்தி முதன்முறையாக இன்று அவையில் உரையாற்றினார். அப்போது, “தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? இந்தியாவின் ஒருபகுதியாக, ஒரு மாநிலமாக மணிப்பூரை பிரதமர் மோடி கருதவில்லை. மத்திய அரசு, தனது செயல்களால் இந்தியாவிலிருந்து மணிப்பூரையே பிரித்துவிட்டது.

ராகுல் காந்தி

பாரத மாதாவையே கொன்றுவீட்டீர்கள். மணிப்பூரை போலவே, இந்தியாவையும் கொலை செய்துவிட்டீர்கள். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் பேசவில்லை. மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரேநாளில் அமைதியை கொண்டுவரலாம். ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார். மோடியும், அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார். அந்த ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை” என்றார் மிகக்கடுமையாக.

இதனை அடுத்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். மிக மோசமான பேச்சை நாம் இங்கு கேட்டோம். அதைக் கண்டிக்கிறேன். நீங்கள் இந்தியா கிடையாது. ஊழலை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ் தான். ஊழலைப் பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவைப் பற்றி பாருங்கள்.

காஷ்மீர் பண்டிட்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது? காஷ்மீர் பண்டிட்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும். காஷ்மீர் சிறப்புப் பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது பெரும் கொடுமைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன” என்றார்.