13 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் தோல்வி pt web
இந்தியா

அடேங்கப்பா..! இத்தனை மத்திய அமைச்சர்கள் மக்களவை தேர்தலில் தோல்வியா? ஷாக் கொடுக்கும் முடிவுகள்!

மத்திய அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்கள் என 13 பேர் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். இதனால் இந்த முறை பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் போது, அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Angeshwar G

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிய முடிவுகள்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் முற்றிலும் பாஜக பெரும்பான்மையாக வெல்லும் என்றே தெரிவித்தன. 350 முதல் 400 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் என்னவோ முற்றிலும் மாறாக வந்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கியது. முடிவில், பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

pm modi, rahul gandhi

INDIA கூட்டணியைப் பொருத்தவரையில், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமாக அந்த கூட்டணி, 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் திமுக 22 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

13 மத்திய அமைச்சர்கள் தோல்வி!

13 மத்திய அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளது பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1. கௌஷல் கிஷோர்

உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்லால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கௌஷல் கிஷோர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் ஆர் கே சௌத்ரியிடம் தோல்வி அடைந்துள்ளார். ஆர் கே சௌத்ரி 6 லட்சத்து 67 ஆயிரத்து 869 வாக்குகள் வாங்கிய நிலையில், கௌஷல் கிஷோர் 1 லட்சத்து 97 ஆயிரத்து 577 வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

L.Murugan

2. ராஜீவ் சந்திரசேகர்

திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் சசிதரூரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். சசி தரூ 3 லட்சத்து 58 ஆயிரத்து 155 வாக்குகளைப் பெற்ற நிலையில் ராஜீவ் சந்திரசேகர் 3 லட்சத்து 42 ஆயிரத்து 078 வாக்குகளை மட்டுமே பெற்று கிட்டத்தட்ட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

3. எல் முருகன்

தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவரும், இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சரான எல் முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஆ. ராசாவிடம் கிட்டத்தட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். ஆ. ராசா 4 லட்சத்து 73 ஆயிரத்து 212 வாக்குகளைப் பெற்ற நிலையில், எல். முருகன், 2 லட்சத்து 32 ஆயிரத்து 627 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

4. அர்ஜூன் முண்டா தோல்வி

ஜார்கண்டின் குந்தி மக்களவைத் தொகுதியில், பழங்குடியின விவகாரத்துறை அமைச்சரும் சிட்டிங் எம்பியுமான அர்ஜூன் முண்டா போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் காளிசரண் முண்டாவிடம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். காளி சரண் முண்டா 5 லட்சத்து 11 ஆயிரத்து 647 வாக்குகளைப் பெற்ற நிலையில், அர்ஜூண் முண்டா 3 லட்சத்து 61 ஆயிரத்து 972 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

கைலாஷ் சவுத்ரி

5. கைலாஷ் சவுத்ரி

விவசாயிகள் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான கைலாஷ் சவுத்ரி, ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் மூன்றாம் இடமே பிடித்துள்ளார். பார்மர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் உம்மேடா ராம் பெனிவால் (UMMEDA RAM BENIWAL) 7 லட்சத்து 4 ஆயிரத்து 676 வாக்குகளைப் பெற்றார். இரண்டாம் இடத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் பாதி (RAVINDRA SINGH BHATI) 5 லட்சத்து 86 ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்றார். மூன்றாம் இடத்திலுள்ள கைலாஷ் சௌத்ரி 2 லட்சத்து 86 ஆயிரத்து 733 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

6. சுபாஸ் சர்க்கார்

இதேபோல் மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மக்களவைத் தொகுதியில் கல்வித்துறை இணை அமைச்சரான சுபாஸ் சர்க்கார், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான அருப் சக்கரவத்தியிடம் 32 ஆயிரத்து 778 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

7. அஜஸ் மிஸ்ரா தெனி

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை இணை அமைச்சரான அஜஸ் மிஸ்ரா தெனி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உட்கர்ஷ் வர்மாவிடம் 34, 329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அஜஸ் மிஸ்ரா தெனி

8. நிதிஷ் ப்ராமாணிக்

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் இணை அமைச்சர் நிதிஷ் ப்ராமாணிக், மேற்கு வங்கத்தின் கூச்பிகார் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஜெகதீஷ் சந்திராவிடம் கிட்டத்தட்ட 39 ஆயிரத்து 250 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

9. ஸ்மிருதி இரானி

அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை வீழ்த்தி இந்தியா முழுக்க கவனம் பெற்றார் ஸ்மிருதி இரானி. மத்திய அமைச்சர் பொறுப்பை வகித்த ஸ்மிருதி இரானி இந்த முறையும் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஸ்மிருதி இரானிக்கு காங்கிரசின் கிஷோரி லால் சர்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார். 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்துள்ளார்.

10. சஞ்சீவ் பல்யான்

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் ஹரேந்திர சிங் மாலிக்கிடம் சுமார் 24 ஆயிரத்து 672 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

11. மகேந்திரநாத் பாண்டே,

மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே, உத்தரப்பிரதேசத்தின் சந்துளி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரேந்திரசிங் -யிடம் கிட்டத்தட்ட 21 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

12. ஆர்கே சிங்

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராக இருக்கும் ஆர்கே சிங் தோல்வியை தழுவியுள்ளார்.

இதே போல மத்திய அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்கள் என 13 பேர் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். இதனால் இந்த முறை பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் போது, அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.