இந்தியா

திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்பாக வீர மரணமடைந்த ராணுவ மேஜர்

திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்பாக வீர மரணமடைந்த ராணுவ மேஜர்

Rasus

பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர், தனது முதலாம் ஆண்டு திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

கடந்த 14-ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஜெயிஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். 40 வீரர்கள் உயிரிழந்த இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில், பயங்ரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேசமயம் இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணு மேஜர் விபுதி ஷங்கர் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் 55 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. மேஜரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரது மனைவி நிதிகா கவுல் (27) கவலையுடன் இருந்தார். அப்போது, மேஜரின் புகைப்படத்தை பார்த்த அவர், ‘ஐ லவ் யூ’ என்று உருக்கமாக கூறிய படி, முத்தமிட்டார். இந்தச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அத்துடன் கணவரின் சவப்பேட்டி முன் நின்று பேசிய அவர், “ என்னை காதலிப்பதாக நீ சொன்னாய். ஆனால் உண்மையில் எல்லாவற்றையும் விட நம் தாய்நாட்டைத் தான் நீ அதிகம் நேசித்துள்ளாய்” என்றார். மேலும் “நான் உதவியற்ற நிலையில் இல்லை. எனது கணவர் ஒரு வீர இதயம் கொண்டவர்” என்றும் கூறினார்.

இந்நிலையில் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர், தனது முதலாம் ஆண்டு திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டா திட்டமிட்டது தெரியவந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதலாண்டு திருமண நாள் வரவுள்ள நிலையில் குடும்பத்தினருடன் அதனை சிறப்பாக கொண்டாட மேஜர் விபுதி ஷங்கர் திட்டமிட்டிருந்தாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்குள் நாட்டிற்காக அவர் வீரமணம் அடைந்துவிட்டார். ராணுவ மேஜர் விபுதி ஷங்கர் தான் வீட்டில் கடைசி பிள்ளை. அவருக்கு 3 மூத்த சகோதரிகளும், அம்மாவும், பாட்டியும் உள்ளனர்.

கடந்த 4 வருடமாக காதலித்துதான் நிதிகா கவுலை விபுதி ஷங்கர் கரம்பிடித்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கூறும்போது, எங்களது காதலில் எந்தவித நாடகத் தன்மையும், போலியும் இருந்தது கிடையாது. மிகவும், எளிமையான அழகான காதல் எங்களுடையது. காதலில் இருந்ததைவிடவும், கல்யாணத்திற்கு பின் எங்களது அன்பு மேலும் கூடியது. கொஞ்சம் தூரத்தில் இருந்தாலும் எப்போதும் என் மீது அதிக அக்கறையும், என் முடிவுகளுக்கு மதிப்பு கொடுப்பவராகவும் இருந்தார் என தெரிவித்துள்ளார்.