இந்தியா

ஜார்க்கண்டில் கழிவுநீர் தொட்டியில் வெளியான நச்சுக் காற்றை சுவாசித்த ஆறு பேர் மரணம்

ஜார்க்கண்டில் கழிவுநீர் தொட்டியில் வெளியான நச்சுக் காற்றை சுவாசித்த ஆறு பேர் மரணம்

EllusamyKarthik

ஜார்கண்டின்  தியோகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரஜேஷ் சந்திர பர்ன்வால். தனது வீட்டில் 20 அடி ஆழமும், 7 அடி அகலமும் கொண்ட கழிவுநீர் தொட்டி கட்டி வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று கட்டுமான பணியை அவர் வீட்டில் மேற்கொண்ட போது அதிலிருந்து வெளியான நச்சு காற்றை சுவாசித்து பர்ன்வால் உட்பட ஆறு பேர் இறந்துள்ளனர். 

முதலில் கட்டுமானத் தொழிலாளி லீலு முர்மு திட்டமிடப்பட்ட பணிளை தொடர  தொட்டியின் மூடியை அகற்றிவிட்டு உள்ளே இறங்கியுள்ளார். உள்ளே சென்ற அவரது குரல் எதுவும் கேட்காததால் சந்தேகத்தின் பேரில் பிரஜேஷ் சந்திர பர்ன்வால்(50), மிதிலேஷ் சந்திர பர்ன்வால் (40), கோவிந்த் மஞ்சி (50), பாப்லு மஞ்சி (30), லாலு மஞ்சி (25) என ஒருவர் பின் ஒருவராக இறங்கியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேவிபூரின் வட்டாட்சியர் சுனில் குமார் தெரிவித்தது ‘நாங்கள் தொட்டியை உடைத்த போது ஆறு பேரும் மயக்கமடைந்து தரையில் கிடந்தனர். உடனடியாக அவர்களை சதர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர்கள் ஏற்கெனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்றார்.

மூச்சுத் திணறலால் ஆறு பேரும் இறந்ததாக தெரிவித்துள்ளார் தியோகர் மாவட்ட துணை ஆணையர் கமலேஷ்வர் பிரசாத் சிங்.

‘பிரேத பரிசோதனைக்குப் பிறகு, இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிய முடியும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.