ஹரியானா மாநிலத்தில் மகேந்திரகர் மாவட்டத்தில் GRL பப்ளிக் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் பேருந்து ஒன்று, இன்று 40 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி பயணப்பட்டுள்ளது. நாடு முழுக்க ரம்ஜான் பொதுவிடுமுறை அமலில் உள்ள நிலையில், இப்பள்ளி இன்று இயங்கி வந்துள்ளது.
சுமார் 40 குழந்தைகள் பேருந்தில் பயணித்துள்ளனர். பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பேருந்தில் பயணித்த 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிற குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து ஓட்டுநர், மது அருந்தி இருக்கலாம் என விபத்தினை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அந்த கோணத்திலும் காவல்துறை விசாராணையை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக ஓட்டுநரின் ரத்த மாதிரிகள் தற்போது ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பேருந்துக்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா என்றும் பரிசோதிக்கப்பட உள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்றுள்ள அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சீமா திரிகா, “பொது விடுமுறை இருந்தபோதிலும், பள்ளி இயங்கியுள்ளது. இதுபோன்ற செயல்களில் தனியார் பள்ளி ஈடுபடுவதை நிறுத்தவேண்டும். இந்த விபத்து தொடர்பாக, பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள மாணவர்களையும் அமைச்சர் சீமா திரிகா சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தன் பதிவில், “ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் பள்ளி பேருந்து விபத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இந்த கொடூரமான செய்தியை தாங்கும் சக்தியை அக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இறைவன் தருவானாக. காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றுள்ளார் வேதனையுடன்.