இந்தியா

பாதுகாப்பு வளையத்தில் வடகிழக்கு டெல்லி: காவல்துறை தகவல்

பாதுகாப்பு வளையத்தில் வடகிழக்கு டெல்லி: காவல்துறை தகவல்

jagadeesh

டெல்லியில் வன்முறை நிகழ்ந்த வடகிழக்கு பகுதி முழுமையாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு நடத்தினார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட நிலையில் கற்களை வீசியும் மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல்துறையினர் வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாலும் நிலைமை மோசமாகியுள்ளதாகவும், ராணுவம் வரவழைக்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறியிருந்தார்.

இந்த தகவலை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று இரவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து வன்முறை நிகழ்ந்த டெல்லி வடகிழக்கு பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிஆர்பிஎ‌ஃப் வீரர்கள், துணை ராணுவனத்தினர் என 4 ஆயிரத்து 500 வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்கள் குழு குழுவாக சென்று காலை முதலே வன்முறை நிகழ்ந்த இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தற்போது 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவும், 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‌இந்நிலையில் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்த நிலையில், காலை முதலே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காவல்நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்ததய அவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இன்று காலை முதலே டெல்லி வடகிழக்கு பகுதி முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ளதாகவும் வன்முறை ஏதும் நிகழவில்லை எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது