இந்தியா

சிட்டிங் எம்பி, எம்எல்ஏக்கள்மீது 2556 குற்ற வழக்குகள்! அதிரடிக்கு தயாராகும் உச்சநீதிமன்றம்

EllusamyKarthik

இந்நாள் மற்றும் முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்களின் மீது பதியப்பட்டு நிலுவையில் உள்ள கிரிமினல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அஸ்வினி குமார் உபாத்யா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இதையடுத்து இந்நாள் மற்றும் முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்களின் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு குறித்த விவரங்களை கொடுக்குமாறு உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். 

அதோடு அது சம்பந்தமான விவரங்களை சேகரித்து கொடுக்க விஜய் அன்சாரியா மற்றும் சினேகா கலிதா ஆகிய வழக்கறிஞர்களை நியமித்தது உச்சநீதிமன்றம். 

‘மொத்தமாக சுமார் 4442 கிரிமினல் வழக்குகள் இந்நாள் மற்றும் முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்களின் மீது பதியப்பட்டு நிலுவையில் உள்ளன. அதில் 2556 கிரிமினல் வழக்குகளை சிட்டிங் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். 

மேலும் சுமார் 413 வழக்குகள், ஆயுள் தண்டனை பெருமளவிற்கு குற்றவாளிகள் குற்றம் செய்துள்ளனர்’ என வழக்கறிஞர்கள் இருவரும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது குற்ற வழக்குகள் ஆயுள் தண்டனை பெருமளவிற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு நாட்டிலேயே உத்தரபிரதேசம் (446) மற்றும் கேரளாவை (310) சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தான் அதிகளவில் வழக்கை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை விரைந்து முடிக்க இதற்கென பிரத்யேக நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்கவும் உச்சநீதிமன்றம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.