இந்தியா

பாடகி சித்ராவுக்கு ‘பத்ம பூஷண்’ - நன்றி தெரிவித்து வீடியோ

Sinekadhara

தனக்கு ‘பத்ம பூஷண்’ விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து பாடகி சித்ரா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சினிமாத் துறையைச் சேர்ந்த மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ உட்பட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பல மொழிகளிலும் பாடி மக்கள் மனதில் இடம்பெற்ற ’சின்னக்குயில்’ சித்ராவுக்கும் ‘பத்ம பூஷண்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ’’அனைவருக்கும் வணக்கம்! இந்திய அரசு எனக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது என்னுடைய இசைப்பயணத்தின் 42-ஆவது வருடம். இந்த நேரத்தில் கடவுளுக்கும், எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுகிறேன். இது சாத்தியமாக உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசைமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், ஒலிப்பதிவாளர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். அதேசமயம் இது என்னுடைய  ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் அன்பால்தான் சாத்தியமானது. எனக்கு இந்த விருதை அறிவித்த நமது நாட்டிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

இதற்குமுன்பே சித்ரா 8 முறை தேசிய விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.