இந்தியா

மீண்டும் ஆட்சி அமைந்தால் இலவச ஊதியம்: சிக்கிம் முதல்வர்

Rasus

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யுபிஐ (UBI) எனப்படும் இலவச அடிப்படை மாத ஊதியம் வழங்கும் திட்டம் சிக்கிம் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சராக இருப்பவர் பவன் குமார் சாம்லிங். இவர்தான் இந்தியாவிலேயே நீண்ட காலம் தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையும் பவன் குமார் சாம்லிங் சந்திக்க உள்ளார்.

தேர்தலையொட்டி அவர் தற்போது மாநில மக்களுக்கு வாக்குரிமை அளித்துள்ளார். அதாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் யுபிஐ (UBI) எனப்படும் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவிலான இலவச மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதாவது அரசின் பணம் மாதந்தோறும் அனைத்து மக்களுக்கும் குறிப்பிட்ட அளவில் பகிர்ந்தளிக்கப்படும். இந்தத் திட்டம் 2022-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து பல பொருளாதார நிபுணர்கள் பேசி வந்தாலும் கூட வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் ஓரளவிற்கு எடுபட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பின்லாந்தில் இதேபோன்றதொரு திட்டம் முதல்முறையாக அமல்படுத்தப்பட்டது. பின்னர் அங்கேயும் கைவிடப்பட்டது. தற்போது சிக்கிம் மாநில முதலமைச்சர் யுபிஐ திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டம் அமல்படுத்தப்படுமாயின் இந்தியாவில் குடிமக்களுக்கு மாந்தோறும் அடிப்படை ஊதியம் வழங்கும் முதல் மாநிலமாக சிக்கிம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.