model image twitter
இந்தியா

’அம்மா உணவகம் அமைக்கப்படும்’ - தமிழ்நாட்டை பின்பற்றி சிக்கிமில் பாஜக தேர்தல் வாக்குறுதி!

நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிமில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அம்மா உணவகம் தொடங்கப்படும் என அது வாக்குறுதி அளித்துள்ளது.

Prakash J

மக்களவைத் தேர்தலுடன் சிக்கிமில் சட்டசபைத் தேர்தல்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. அந்த வகையில், 32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பரப்புரையில் அம்மாநில கட்சியினரும் தேசியக் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை நேற்று பாஜக வெளியிட்டது. இதில் முழுவதும் பெண்களால் நடத்தப்படக்கூடிய வகையில் ’அம்மா உணவகம்’ என்ற பெயரில் அரசு உணவகம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனுடன் பெண்களைக் கவரும்வகையில் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.

பாஜகவின் சிக்கிம் மாநில தேர்தல் அறிக்கை

'கதி சக்தி மாஸ்டர் பிளான்' வாயிலாக சாலை, ரயில், விமான போக்குவரத்து என முக்கியமான திட்டங்களின் பலதரப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு உறுதி செய்யப்படும்

சுயஉதவி குழுக்கள் வாயிலாக 15,000 பெண் லட்சாதிபதிகள் உருவாக்கப்பட்டு, பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும்.

பெண்களால் நடத்தப்படும் 'அம்மா கேன்டீன்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும்.

மத்திய அரசுடன் இணைந்து உலகத் தரம் வாய்ந்த ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிறுவனம் அமைக்கப்படும்

அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கிமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின்கீழ், விவசாயிகள் ஆண்டுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாயை 9,000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

சிக்கிம் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 371 எப் - பின் சாராம்சம் பாதுகாக்கப்படும்.

பெண்கள் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்; சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும்.

சிக்கிமில் மருத்துவ அறிவியலுக்கான பிராந்திய நிறுவனம் அமைக்கப்படும்.

இதையும் படிக்க: சமரசமா..? மும்பை அணியில் திடீர் ட்விஸ்ட்! ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற ஆகாஷ் அம்பானி! #ViralVideo

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜே.பி.நட்டா

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜே.பி.நட்டா, “வடகிழக்கில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி அயராது உழைத்து வருகிறார். கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதே அவரது நோக்கம். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிமின் நிலைமைக்கும் இப்போது உள்ள நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள 1 மக்களவைத் தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வெற்றிபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகம்

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் தொடங்கப்பட்டபோது முதலில் 207 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக சென்னையில் வார்டு ஒன்றுக்கு தலா 2 உணவகம், அரசு மருத்துவமனைகளில் 7 என மொத்தம் 407 இடங்களில் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவகங்கள் (இவற்றில் தற்போது சில மூடப்பட்டு உள்ளன) செயல்படுத்தப்பட்டன. மேலும், ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான இந்த அம்மா உணவகங்கள், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்குகின்றன. இதேபோன்ற உணவகங்கள் பிற மாநிலங்களிலும் (ராஜஸ்தான், உ.பி., ம.பி) தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிக்கிமிலும் இதற்கான வாக்குறுதியை பாஜக அரசு அளித்திருப்பது மீண்டும் பேசுபொருளாகி வருகிறது.

இதையும் படிக்க: அரசு பணத்தில் உல்லாசம்| வெளிநாடு சென்ற 3 ஐஏஎஸ் அதிகாரிகள்.. தணிக்கையில் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!