இந்தியா

கத்தி வைத்திருந்ததால் டெல்லி மெட்ரோவில் சீக்கியரைத் தடுத்த அதிகாரி; சர்ச்சையான சம்பவம்

கத்தி வைத்திருந்ததால் டெல்லி மெட்ரோவில் சீக்கியரைத் தடுத்த அதிகாரி; சர்ச்சையான சம்பவம்

Abinaya

கத்தியுடன் (சீக்கியரின் அடையாளம்) வந்ததாக கூறி `டெல்லி துவாரகா செக்டார் 21’ என்ற மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக சீக்கியர் ஒருவர் செப்டம்பர் 8ம் தேதி அளித்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (NMC) டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் (DMRC) தலைவர் மற்றும் டெல்லி தலைமைச் செயலரிடம் அறிக்கை கேட்டுள்ளது.

தக்த் ஸ்ரீ தம்தாமா சாஹிப்பின் (Takht Sri Damdama Sahib) முன்னாள் நிர்வாகி ஜதேதாரான (Jathedar) கியானி கேவல் சிங், ’மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் செல்ல விடாமல் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை தடுத்து நிறுத்தியதாகவும் மேலும் டர்பனை கழற்றிவிட்டு உள்ளே செல்லும்படியாக கூறியதாகவும்’ புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், `இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவில், சீக்கியர்கள் சீக்கியர்களின் அடையாளமாகத் திகழும் டர்பன், கத்தியை, எல்லா இடத்துக்கும் எடுத்து செல்லவும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த சம்பவம் சீக்கியர்களின் மத உணர்வைப் புண்படுத்தியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் டெல்லி தலைமைச் செயலாளரிடம் தேசிய சிறுபான்மையினர் ஆணைத்தின் தலைவர் இக்பால் சிங் லால்புரா அறிக்கை கேட்டுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் காரணமான அதிகாரிகளைக் கண்டித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீக்கிய அமைப்பான பான்திக் டல்மேல் சங்கதன் (Panthic Talmel Sangathan) என்ற அமைப்பு 150 சீக்கியர்களுடன் போராட்டம் நடத்தியது. இந்த சீக்கிய அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் ஜஸ்விந்தர் சிங் போராட்டத்தின் போது கூறியது, “சீக்கியர்கள் அணியும் ஐந்து மதநம்பிக்கை பொருட்களின் கத்தியும் ஒன்று. கியானி கேவல் சிங்கிற்கு நடந்த சம்பவம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவை மீறியுள்ளது, தனிநபர்கள் மத சின்னங்களை அணியச் சட்டம் அனுமதிக்கும் போது மற்றவர்கள் இதில் தலையிடக் கூடாது ” என்றுள்ளார்.