Mahinder Kaur - Sheikh Abdullah Aziz  Twitter
இந்தியா

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த அக்கா - தம்பி... 75 வருடங்களுக்குப்பின் இணைந்த தருணம்!

Justindurai S

இந்தியாவின் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த மகேந்திர கவுர் (81), பாகிஸ்தானில் வசித்து வரும் தனது சகோதரனான ஷேக் அப்துல்லா அஜீஸை (78) 75 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது 1947-ல் பஞ்சாப்பை சேர்ந்த சர்தார் பஜன் சிங்கின் குடும்பம் பிரிந்துள்ளது. அதன்படி சர்தார் பஜன் சிங்கின் இளைய மகன் ஷேக் அப்துல்லா அஜீஸ் என்பவர், பாகிஸ்தான் புலம்பெயர்ந்துள்ளார். அதேநேரம் சர்தார் பஜன் சிங்கின் மூத்த மகள் மகேந்திர கவுர் உள்பட மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்தியாவின் பஞ்சாப்பிலேயே இருந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குடியேறிய அஜீஸ், இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அதன்பின் அஜீஸை மீண்டும் காண அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் முயன்றபோது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது அவர்களுக்கு. அதேபோல் அஜீஸ் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அதுவும் நடக்கவில்லை என சொல்லப்படுகிறது.

ஒருகட்டத்தில் இரு தரப்பினருமே விட்டுவிடவே, 75 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது உடன்பிறப்புகளான மகேந்திர கவுரும், ஷேக் அப்துல்லா அஜீஸு ம் பிரிந்துபோனது குறித்து அண்மையில் சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகியிருந்தன. அதன் எதிரொலியாக மகேந்திர கவுரும், ஷேக் அப்துல்லா அஜீஸு ம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியது.

Partition of India

இதையடுத்து இரு குடும்பத்தினரும் பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ள குருத்வாராவில் சந்தித்துக் கொண்டனர். அங்கு தன் அக்கா மகேந்திர கவுரை கண்ணீர் மல்க வரவேற்ற அஜீஸ், அவரை கட்டியணைத்து தன் பாசத்தை பகிர்ந்து கொண்டார். கண்களிலும் கண்ணீர் ததும்ப, நெகிழ்ச்சி தருணங்களிடையே இருவரும் இணைந்தனர். இருவருக்குமே, பிரிந்த தன் குடும்பத்தைச் சந்தித்த ஆனந்தத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.

இதையடுத்து குருத்வாரா தர்பார் சாஹிப்பில் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய இருவரும், நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். கர்தார்பூர் நிர்வாகம் இரு குடும்பத்தினருக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கவுரவித்தது.

75 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த அக்கா - தம்பி மகிழ்ச்சியாக மீண்டும் ஒன்றிணைந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கர்தார்பூர் குருத்வாராவுக்கு விசா இல்லாமல் சென்றுவர இந்திய சீக்கியர்களுக்கு அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.