சபரிமலை கோயிலில் நடை திறந்த முதல் நாளிலேயே, 3 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நடை திறந்த முதல் நாளிலேயே 3 கோடியே 30 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வசூலாகி இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வசூல் தொகை இரு மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்த முயன்றதால், பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனால், பக்தர்கள் வருகை குறைந்ததோடு, நடை திறந்த முதல் நாளில் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலானது.