பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் கீழ் இலவச ரேஷன் தானியங்கள் விநியோகிக்கப்படும் மையங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வரின் படங்கள் இடம்பெறும் பதாகைகளைப் பயன்படுத்துமாறு பாஜக ஆளும் மாநிலங்களை கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
இலவச உணவுதானியங்களை வழங்கும் ரேஷன் பைகளில் பாஜகவின் சின்னமான தாமரை இடம்பெறவேண்டும் என்றும் இந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜகவின் அனைத்து மாநில பிரிவுகளுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மக்களின் பொருளாதார கஷ்டங்களை குறைக்கும் பொருட்டு இந்த ஆண்டு ஜூன் வரை இரண்டு மாதங்களுக்கு, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் 80 கோடி பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மாதத்திற்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் காண்பிக்கப்பட வேண்டிய பேனரின் வடிவமைப்பின் மாதிரி, பாஜக டெல்லி அலுவலகத்தால் உருவாக்கப்பட்டு, மாநில கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாஜக ஆளாத மாநிலங்களிலும் ரேஷன் பைகளில் தாமரை சின்னம் இடம்பெற வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.