செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை சரிபார்க்க ஆதாரை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசின் திட்டங்களை பெற ஆதார் அவசியம் என்றும் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அத்தோடு, எந்தெந்த விவகாரங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது. வங்கிக் கணக்குகள் துவங்க, சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. அதே போல் சிம் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைதொடர்ந்து ஆதார் அட்டை அடிப்படையில் வழங்கப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவ்வாறு வெளியான தகவல் உண்மை இல்லை என்று தொலைத்தொடர்பு துறையும், ஆதார் ஆணையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் தவிர புதிதாக சிம் வாங்குபவர்களிடமும் கை ரேகையை பெற்று அவரது ஆதார் விவரங்களை சரிபார்க்க கூடாது என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் அரசின் அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. ஆதார் அல்லாமல் வேறு வழிகளில் வாடிக்கையாளர் விவரத்தை சரிபார்க்க ஏறபடுத்தப்பட்டுள்ள நடைமுறை குறித்து நவம்பர் 5ம் தேதிக்குள் தெரிவிக்குமாறும் செல்போன் நிறுவனங்களை அரசு கேட்டுள்ளது.