டெல்லி அருகே ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் உடன் சென்ற அணிவகுப்பு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதோடு, 63 இடங்களில் டெபாசிட் இழந்தது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மெஹரூலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ், கிஷன்கர் என்ற பகுதியில் இருக்கும் கோயிலுக்கு சென்றுள்ளார். வழிபாடு முடிந்த பின் வீட்டிற்கு திரும்பும் வழியில், அவரது அணிவகுப்பு வாகன வரிசையை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 7 முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் அசோக் மான் என்பவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்திற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இத்தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை என்றும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் எம்எல்ஏ நரேஷ் யாதவ் டெல்லி போலீசை வலியுறுத்தியுள்ளார்.