இந்தியா

ஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்!

ஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்!

webteam

எதிரி வீட்டுக்குள் ஆட்டுக்குட்டி புழுக்கைப் போட்டதை அடுத்து எழுந்த மோதல், துப்பாக்கிச்சூடு வரை சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டம் ஜைத்ரா அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுக்வீர். இருவருக்கும் சொத்துப் பிரச்னை காரணமாக பலவருட பகை. இதனால் பேச்சுவார்த்தை இல்லை. எப்போதும் முறைத்துக் கொண்டு அலைவது வழக்கமாம். இந்தப் பகை கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக்கிடந்த நிலையில் அதைக் கீறி விட்டது ஓர் ஆடு.

கடந்த செவ்வாய்க்கிழமை, சுக்வீருக்குச் சொந்தமான ஆடு ஒன்று எதிரியான யோகேஷ் வீட்டுக்குச் சென்றது. சென்றாலும் பரவாயில்லை, அங்கு ஆட்டுப்புழுக்கைகளை போட்டுவிட்டு ஹாயாக வாயை அசைத்தபடி வந்துவிட்டது. போதாதா மல்லுக்கட்ட? கொதித்தெழுந்தார் யோகேஷ். 

‘உன் ஆடு எப்படி என் வீட்டுக்குள்ள வந்து புழுக்கைப் போடலாம்?’ என்று யோகேஷ் ஆக்ரோஷமாகக் கத்த, ’அது வாயில்லா ஜீவன், அது தெரியாம வந்ததுக்காக வம்புக்கு இழுப்பியா?’ என்று சுக்வீரும் வரிந்துகட்ட, கூடி விட்டது தெரு. சுக்வீர் ஆதரவாளர்களும் யோகேஷ் ஆதரவாளர்களும் திரண்டு அடிதடியில் இறங்கினர். கம்புகளால் தாக்கிக் கொண்ட அவர்கள் பிறகு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். சினிமாவில் வருவது போல இருவரும் மாறி மாறித் துப்பாக்கியால் சுட்டுத்தள்ள, ஊருக்குள் பீதி ஏற்பட்டது. சிலர் காயமடைந்தனர்.

ஜைத்ரா போலீசுக்கு தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், தப்பியோடி விட்டனர்.

இதுபற்றி எடா எஸ்.பி. சுனில் குமார் சிங் கூறும்போது, ‘இந்த தாக்குதல் தொடர்பாக யோகேஷ், சுக்வீர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு குடும்பத்தினரிடம் இருந்தும் நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை நடத்து வருகிறது’ என்றார். 

ஆடு புழுக்கைப் போட்டதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.