இந்தியா

ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச்சூடு - தினகரன், சீமான் கண்டனம்

ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச்சூடு - தினகரன், சீமான் கண்டனம்

Veeramani

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், " உத்தரப் பிரதேசத்தில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கார் துப்பாக்கியால் சுடப்பட்ட செய்தியை கண்டு அதிர்ச்சியடைகிறேன். இந்த கோழைத்தனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீரட்டில் தேர்தல் பரப்புரை முடித்துவிட்டு, டெல்லி திரும்பும் வழியில் ஏஐஎம்ஐஎம் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி அவர்களின் பரப்புரை வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறித்து, இந்தியாவின் பன்முகத்தன்மையையும், இறையாண்மையையும் முற்றுமுழுதாக சீர்குலைக்கும் மோடி அரசினை எதிர்த்து குரல் கொடுத்துவரும் ஓவைசியின் மீதான தாக்குதல், மதவாதிகளால் நடத்தப்பட்ட மீண்டுமொரு கோழைத்தனமான தாக்குதலாகவே இருக்கக்கூடும் என்ற ஐயமே எழுகிறது.

இதற்கு காரணமானவர்கள் மற்றும் அதன் பின்புலத்தில் இருப்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்