மிகிர் ஷா எக்ஸ் தளம்
இந்தியா

மும்பை| போதையில் கார் ஓட்டிய சிவசேனா தலைவர் மகன்.. வசமாக சிக்கிய மதுக்கடை பில்; முதல்வர் சொன்னதென்ன?

மும்பை விபத்து சம்பவத்தில், காரை ஓட்டி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மிகிர் ஷா, அந்தச் சம்பவத்தின்போது மது அருந்தியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Prakash J

சமீபகாலமாக, போதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேயைச் சேர்ந்த 17 வயது சிறுவன், போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியிருந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தும் புனேயில் கார் விபத்து சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில், மும்பையின் கோலிவாடா பகுதியைச் சேர்ந்த காவேரி நக்வா, பிரதிக் நக்வா தம்பதி நேற்று (ஜூலை 7) அதிகாலை 5.30 மணி அளவில் சசூன் துறைமுகப்பகுதியில் இருந்து மீன் வாங்கி கொண்டு வீடு திரும்பினர். அப்போது அதிவேகமாக வந்த BMW கார் ஒன்று, இருசக்கர வாகனத்தில் வந்த இத்தம்பதியின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கணவன் - மனைவி இருவரும் காரின் பானட் மீது தூக்கி வீசப்பட்டனர். அப்போது கணவர் பிரதிக் நக்வா காரின் பானட்டிலிருந்து குதித்ததால், படுகாயம் அடைந்து உயிர் தப்பினார். ஆனால் மனைவி காவேரி நக்வா, கடுமையாகப் போராடியும் பானட்டிலிருந்து தப்பிக்க இயலாததால், கிட்டத்தட்ட 100மீ வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இவ்விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பிச்சென்றார்.

இதையும் படிக்க: 10 ஆண்டுகள் ஆனபோதும் ஆந்திரா, தெலங்கானா இடையே தீராத பிரச்னைகள்.. பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

இதற்கிடையே படுகாயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவே, அங்கு காவேரி மட்டும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிகிர் ஷா ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து தலைமறைவான மிகிர் ஷா, அவரது தந்தை மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் ரிஷி ஆகியோ கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், காரை ஓட்டி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மிகிர் ஷா, அந்தச் சம்பவத்தின்போது மது அருந்தியிருக்கலாம் என்று கூறுகின்றனர். ஏனெனில், சம்பவத்திற்கு முன்னர் மிகிர் ஷா மதுக்கடையில் இருந்தது தெரியவந்துள்ளது. விசாரணை மேற்கொண்டதில், மிகிர் ஷா மதுக்கடையில் மதுவுக்காக மட்டும் ரூ.18,730 கட்டணமாகச் செலுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே

இதுகுறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “சட்டம் அனைவருக்கும் சமம். இதில் யாரையும் காப்பாற்ற முடியாது. அரசு ஒவ்வொரு வழக்கையும் ஒரேமாதிரியாகப் பார்க்கிறது. இந்த விபத்துக்கு என்று தனி விதி இருக்காது. எல்லாம் சட்டப்படி நடக்கும். காவல்துறை யாரையும் கவசமாக்காது. மும்பை விபத்து துரதிர்ஷ்டவசமாக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் பேசியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நடிகர் தர்ஷனுக்கு கைதி எண் 6106.. டாட்டூ போடும் ரசிகர்கள்.. ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்!